Kadal Pura - Sandilyan

Sunday, May 21, 2006

சாண்டில்யனின் கடல் புறா - முன்னுரை

இந்தியாவிலேயே இணையற்ற செல்வாக்கையும் செலாவணியையும் பெற்றுள்ள 'குமுதம்' பத்திரிக்கையில் தொடர்கதையாக வந்த 'கடல் புறா' முற்றுப் பெற்றதும் அப்பத்திரிகைக் காரியாலயத்திற்கு வந்த ஏராளமான கடிதங்களில் ஒன்றை எழுதியவர் அதைக் 'காவியப் புறா' என்று குறிப்பிட்டிருந்தார். ஓரு விஷயத்தில் அது உண்மை. ஓரு பெறும் காவியத்தின் அளவுக்கு நீண்டு விட்டது 'கடல் புறா'. மூன்று ஆண்டுகள் ஒரு வாரம் தொடர்ச்சியாக இக்கதை 'குமுத'த்தில் வெளிவந்தது. இக்கதையை எழுத ஆரம்பித்தபோது மூன்று வருடம் ஓட்டும் உத்தேசம் இல்லை எனக்கு. ஆசையும் அவசியமும் கதையை நீட்டிவிட்டது.

தமிழர்களைப்பற்றிய வரலாற்று ஆராச்சி நூல்களைப் படித்தபோதும், கல்வெட்டுக்களைப் பற்றிய ஏடுகளைப் புரட்டிய போதும், கடல் கடந்த தமிழர்களைப் பற்றிய குறிப்புகள் எம் மனத்தில் ஆழப் பதிந்தன. திரும்ப திரும்ப அவற்றில் காணப்பட்ட கடாரம் என்ற சொல்லைப் பற்றியே பல நாட்கள் சிந்தித்தேன். 'நல்ல யந்திர வசதியுள்ள இக்காலத்திலேயே கப்பல் பயணம் கஷ்டமாய் இருக்க, எந்த வசதியுமில்லாத காலத்தில் பழந்தமிழர்கள் எப்படிக் கடல் கடந்து சென்று வாணிபம் செய்தார்கள்? ராஜேந்திர சோழனும் மற்ற பிற்காலச் சோழர்களும் எங்கோ இருக்கும் கடாரத்துக்கு மரக்கலங்களைக் கொண்டு சென்று எப்படிப் போர் புரிந்தார்கள்?' என்ற கேள்விகளும் அடிக்கடி சிந்தனையில் எழுந்தன. ஆகவே அந்தக் காலத்துக் கடல் வாணிபம், கடல் போர் இவற்றைப் பற்றி ஆராயத் தொடங்கினேன்.

ஆராய்ச்சி சுலபமாயில்லை. தமிழில் கிடைத்த விஷயங்கள் சொற்பமாயிருந்தன. 'அந்தக் காலத்தில் எத்தகைய கப்பல்களைக் கட்டினார்கள்? எத்தனை விதக் கப்பல்களைக் கட்டினார்கள்? அவற்றின் உபயோகம் என்ன?' என்பதெற்கெல்லாம் பல ஆங்கில நூல்களையும் வடமொழி நூல்களையும் பார்க்க வேண்டியதாயிற்று. போஜன் எழுதிய 'யுக்தி கல்பதரு' என்ற மரக்கல அமைப்பு நூல்களைப் பற்றிய குறிப்புகளைப் பேராசிரியர் ராதா முகுத் முகர்ஜி தமது "இந்தியன் ஷிப்பிங்" என்ற நூலில் தந்திருக்கிறார். அந்தக் குறிப்புகள் மரக்கல அமைப்பைப் பற்றி எனக்கு பல சூட்சுமங்களை விளக்கின. பிறகு கடாரத்தின் சரித்திரம், சைலேந்திரர்களின் வமிசாவளி, அவர்கள் வரலாறு முதலியவற்றை டாக்டர் மஜும்தாரின் 'ஸ்வர்ணத்வீபம்' என்ற நூலிலிருந்தும், வீரராஜேந்திரன் காலத்தில் எற்பட்ட கடாரப் போரைப் பற்றிய சில குறிப்புகளை திரு. நீலகண்ட சாஸ்திரியார், டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார், திரு. பி.டி. ஸ்ரீநிவாச அய்யங்கார் இவர்கள் வரலாற்று நூல்களிலிருந்தும் எடுத்துக் கொண்டேன்.

மேற்கூறிய நூல்களிலிருந்து எனக்கு கிடைத்த தகவல்கள் வருமாறு:
"முதலாம் குலோத்துங்கனாக முடி சூடிய அநபாயன் கி.பி.1063-வது வருஷத்திலிருந்து 1070-ம் வருஷம் வரை ஸ்ரீவிஜய சாம்ராஜ்ய அரியணைக்கு நடந்த போட்டியைத் தீர்ப்பதிலும் அங்கு அமைதியை நிலைநிறுத்துவதிலும் ஈடுபட்டிருந்தான். 1077-வது வருஷத்தில் தமிழர் தூது கோஷ்டியொன்று சீனாவை அடைந்தது. அதன் தலைவன் பெயர் 'தேவகுலோ'. இந்த தேவகுலோ என்ற சொற்கள் குலோத்துங்கனைக் குறிக்கும். "

இந்தத் தகவல்களிலிருந்தும், ராஜேந்திர சோழனின் கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்தும், பழந்தமிழர்கள் கடல் கடந்து செல்வதும், அந்நாடுகளின் வாணிபத்தில் மட்டுமின்றிப் போர்களிலும் கலந்து கொள்வதும் சர்வ சகஜமாக இருந்ததென்பதை அறிந்தேன். ஆகவே அவர்கள் சென்ற கடல் மார்க்கங்கள், அவற்றுக்கு உதவிய மரக்கல வகைகள், போர் முறைகள், இவற்றைப் பற்றிய பல நூல்களைப் படித்தேன். அவற்றைப் படித்த பின்னர் ஏற்பட்ட வியப்பு அல்ப சொல்பமல்ல. தமிழர் பரம்பரை எத்தனை வீர பரம்பரை, எத்தனை நாகரிகம் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது, எத்தனை அபாயங்களைத் தமிழர்கள் சமாளித்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தெளிவாகத் தெரிந்தன. இந்த அறிவையெல்லாம் எனது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அந்த ஆசையின் விளைவுதான் 'கடல் புறா'.

'கடல் புறா' கதையைப் புனைய என்னைத் தூண்டிய இலக்கியம் ஜயங்கொண்டாரின் 'கலிங்கத்துப் பரணி'. அதைப் படித்த போது கருணாகரத் தொண்டைமானின் வீரம் மட்டுமல்ல, அவன் கலிங்கத்தில் புரிந்த அட்டூழியங்களும் என் சிந்தனையைத் தூண்டின. என்னதான் போரிட்டாலும் பண்பாடு மிக்க தமிழ்ச் சமுதாயத்தைச் ஒரு தளபதி பயிர்களைக் கொளுத்துவதும், அழிவை எங்கும் விளைவிப்பதும் எப்படிச் சாத்தியம் என்று எண்ணிப் பார்த்தேன். அதை முன்னிட்டுக் கலிங்கத்தின் வரலாற்றையும், வீர ராஜேந்திரன் காலத்தில், தமிழ்-கலிங்க எல்லை விவகாரங்களைப் பற்றியும் ஆராந்தேன். பூசல் பலமாயிருந்தது. அநீதிகளும் சில இழைக்கப்பட்டிருக்கின்றன.பிற்காலத்தில் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தின் மீது இழைத்த கொடுமைக்கு அவை ஏன் காரணமாயிருக்கக் கூடாது என்று யோசித்தேன். அந்த யோசனையையும், குலோத்துங்கன் ஸ்ரீவிஜயப் பயணத்தையும் இணைத்துப் பார்த்ததில் 'கடல் புறா' பிறந்தது. 'கடல் புறா'வைக் 'கலிங்கத்துப் பரணி'யின் சம்பவங்களுக்கு அடிகோலும் நூல் என்று கொள்ளலாம்.

'கடல் புறா'வில் கற்பனையைப் பூர்ணமாக ஓட்டியிருக்கிறேன். சுவையான ஒரு கதையை வரலாற்றுக் குறிப்புகளுடன் நுழைத்துச் சலிப்பில்லாமல் மக்கள் படித்து மகிழச் செய்யப்பட்ட பெருமுயற்சியின் விளைவு 'கடல் புறா'. இதன் தரத்தைத் தமிழ் மக்களும் அறிஞர்களும் மதிப்பிடுவார்கள் ஆகையால் நான் மதிப்பிட முயலவில்லை. முயல்வதும் சரியாகாது. சமைத்த பதார்த்தத்தின் பெருமையைச் சமைத்தவனே விவரிப்பது ரசமல்ல. பண்பாடுமல்ல.

ஆனால் மதிப்பீடு செய்வது அத்தனை எளிதும் அல்ல. சிற்றறிவாளர்களும் பாரபட்சமுள்ளவர்களும் மதிப்பீட்டில் இறங்குவது எத்தனை அசம்பாவிதம் என்பதை சமீபத்தில் வெறொரு சந்தர்ப்பத்தில் கண்டேன். இலக்கிய மேதைகளென்று சொல்லிக் கொள்ளும் சிலர் 'சரித்திரக் கதைகள் இலக்கியமல்ல' என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் 'சரித்திரக் கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை' என்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இலக்கியம் எது என்பதிலுள்ள அறிவுக்குறைவென்பதை சாதாரண மக்கள் கூடப் புரிந்து கொள்வார்கள். 'சரித்திரம்' என்பது ஆகாயத்திலிருந்து குதித்துவிடவில்லையென்பதும், ஆதியில் வாழ்ந்த சமுதாயத்தைப் பற்றிய குறிப்புத் தொகுதிதான் என்பதையும் புரிந்து கொண்டால், 'சரித்திரக் கதைக்கும் சமூகக் கதைக்கும் உடைகளைத் தவிர அதிக வித்தியாசம் எதுவுமில்லை'யென்பது தெரிய வரும். அடிப்படை உணர்ச்சிகள், ஆசாபாசங்கள் எல்லாம் ஆதிகால முதல் மனிதனுக்கு ஒரே விதமாகத்தானிருக்கின்றன. சரித்திரக் கதைகளில் வீர காதல் ரசங்கள் காரணமாக அவை இலக்கியமல்லவென்றால் புராணங்களும், இதர பெருங் காவியங்களும் அடிபட்டுப் போகும். இராமாயணம், மகாபாரதம், தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்கள் எல்லாவற்றையுமே தள்ளி விடும்படியாக இருக்கும். ப்ளுடார்க், ஷேக்ஸ்பியர் போன்றவர்கள் காற்றில் பறந்து விடுவார்கள். இவர்களெல்லாம் போய் மீதி ஏதாவது நிற்க வேண்டுமென்றால், சாரமில்லாத, விரசமான கதை எழுதுவதல்லாமல் 'இதுதான் இலக்கியம்' என்று எழுதுபவர்களே சொல்லிக்கொள்ளும் கதைகள் தாம் மிஞ்சும். இந்த நிலை ஏற்பட வேண்டாம் என்று ஆண்டவனைப் பிரார்த்திப்போமா? தேவையில்லை. சரக்கில்லாத நூல் மக்களிடம் செலாவணியாவதில்லை. தமிழ் மக்கள் உறுதியுள்ளவர்கள். தகுந்தது எது, தகாதது எது என்பது அவர்களுக்கும் தெரியும்.

ஆகவே 'இலக்கியம் எது? இலக்கியம் அல்லாதது எது?' என்ற சர்ச்சை இப்பொழுது தேவையில்லை. பிற்காலத்தில் எது இலக்கியம் என்பது தீர்மாணிக்கப்படும். இப்பொழுது தேவைப்படுவது நூல்கள் பெருகத் துணை செய்யும் விமர்சனம். அப்படி விமர்சனம் செய்பவர்களும் தமிழ் நாட்டில் நாலைந்து பேர்கள் இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம். ஆனால் நாம் ஒரு நூலை எழுதும்போது யாரைத் திருப்தி செய்யவும் எழுதக் கூடாது. நல்லதை எழுத வேண்டும். கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எழுத வேண்டும். நமது நூல்களைப் படிப்பவர்கள் அலுப்புத் தட்டாமால் படிக்கவும், படித்த பின்பு அவர்கள் எண்ணங்களும் அறிவும் உயரவும் விசாலப்படவும் எழுத வேண்டும். இந்த நோக்கங்களுடன் தான் நான் எழுதுகிறேன்.

இந்தக் கடல் புறா சம்பந்தமாக நான் படித்த வரலாற்று நூல்களின் பட்டியலைப் பின்னால் தந்தி ருக்கிறேன். அவற்றிலிருந்து நான் அறிந்த பல உண்மைகளை இந்த நவீனத்தின் ஊடே செலுத்தியிருக்கிறேன். உதாரணமாக 'கப்பல்களில் திசை காட்டும் கருவி நவீன காலத்தியது. வெள்ளையர் கண்டு பிடித்தது' என்று எண்ணுகிறோம். ஆனால் அதை சீனர் கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரத்து முன்னூறு வருஷங்களுக்கு முன்பே அறிந்திருந்தார்களென்ற குறிப்பு இருக்கிறது. இப்படி இன்னும் பல குறிப்புகள் இருக்கின்றன.

'யவனராணி' முடிந்து எட்டு மாத்ங்கள் கழித்துதான் 'கடல் புறா'வைக் 'குமுதத்'தில் துவக்கினேன். அந்த எட்டு மாத ஆராய்ச்சியின் பலனைக் 'கடல் புறா'வில் பார்க்கலாம். தவிர நல்லதொரு கதையையும் பார்க்கலாம். 'யவன ராணி'யைப் போல் 'கடல் புறா'வும் மக்களிடம் பேராதரவைப் பெற்றது. அதைத் தொடர் கதையாகப் பிரசுரித்த 'குமுதம்' ஆசிரியருக்கும், பிரசுரத்தாருக்கும் எனது நன்றி உரித்தாகும். அவர்களிருவரும் எனது நண்பர்கள். அவர்களைப்பற்றி அதிகப்படி எழுதுவது முறையாகாது. இருப்பினும் ஒன்று சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். இன்று நான் லக்ஷக்கணக்கான வாசகர்களைப் பெற்றிருக்கிறேனென்றால் அதற்குக் காரணம் 'குமுதம்' பத்திரிக்கையின் ஆசிரியர் திரு.எஸ்.ஏ.பி. அண்ணாமலையும் அதன் பிரசுரகர்த்தர் திரு.பி.வி. பார்த்தசாரதியும் பல வகைகளிலும் தொடர்ந்து எனக்களித்த ஆதரவுதான்.

'கடல் புறா'வுக்கு ஒரு முகவுரை தேவையென்று நினைத்ததும் என் நினைப்பில் வந்தவர் டாக்டர் என்.சுப்பிரமணியம், எம்.ஏ., பிஎச்.டி. அவர்கள் தான். டாக்டர் சுப்பிரயமணியம் அவர்கள் வரலாற்றில் ஆழ்ந்த ஆராய்ச்சி செய்தவர். சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர். முகவுரை எழுதித் தரவேண்டுமென்று கேட்டுக் கொண்டதும் 'பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் வரலாற்று நூல்களுக்கு முகவுரை எழுதுவது விரும்பத்தக்கதல்லவென்று சில எழுத்தாளர்கள் நினைக்கிறார்கள்' என்று கூறினார். 'ஒரு துறையில் சரியாக ஆராய்ச்சி செய்யாதவர்கள் அதைப் பற்றி அபிப்பிராயம் சொல்வதுதான் தவறு. விஷயந் தெரிந்தவர்கள் எழுதுவதுதான் விரும்பத்தக்கது. அப்பொழுதுதான் நல்ல இலக்கியம் வளரமுடியும். சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியரான உங்களைப் போன்றவர்கள்தான் வரலாற்றுப் புதினங்களின் குணதோஷங்களைச் சரியானபடி எடுத்துச் சொல்ல முடியும்' என்றேன். பிறகுதான் டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் முகவுரை தர இசைந்தார்கள். அப்பெரியாருக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். இதுவரை என் புத்தகங்களுக்கு நல்லறிஞர்களே முகவுரைகள் எழுதி இருக்கிறார்கள். தமிழகத்தின் இணையற்ற அரசியல் தலைவர் எஸ். சத்தியமூர்த்தி, பேராசியர் சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, பேராசிரியர் கே.வி.ரங்கஸ்வாமி ஐயங்கார், 'குமுதம்' ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை ஆகியவர்கள் எழுதியிருக்கிறார்கள். இப்பொழுது பேராசிரியர் டாக்டர் என்.சுப்பிரமணியம், எம்.ஏ., பிஎச்.டி. எழுதியிருக்கிறார். இவர் எழுதித் தந்திருப்பது முகவுரை மட்டுமல்ல, வரலாற்றுப் புதினம் எழுதும் முறை பற்றி விளக்கும் சிறந்த கட்டுரையுங்கூட என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்.

இம் முகவுரையை டாக்டர் என்.சுப்பிரமணியம், எம்.ஏ., பிஎச்.டி. குறுகிய காலத்தில் எழுதிக் கொடுத்தார். 'கடல் புறா'வின் மூன்று பாகங்களையும் மிக விரைவில் படித்து எனக்குத் துரிதமாக முகவுரையும் எழுதிக் கொடுத்ததற்கு நான் மட்டுமல்ல 'வானதி' உரிமையாளர் திரு.ஏ. திருநாவுக்கரசும் கடமைப்பட்டவர். இந்த நாற்பது ரூபாய் (இப்பொழுது ரூ.110) புத்தகத்துக்கு முன்னதாகவே வந்துவிட்ட ஆர்டர்களை நிறைவேற்ற சீக்கிரம் முகவுரை கிடைத்தது எத்தனை உதவி என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

'கடல் புறா' கதையை மக்கள் படித்தாகிவிட்டது. அவர்களை நான் கேட்டுக்கொள்ள வேண்டியது ஒன்றுதான். ஏத்தனையோ செலவழிக்கும் நீங்கள் 'கடல் புறா' புத்தகத்தையும் வாங்கி உங்கள் வீட்டில் வையுங்கள். அப்படிச் செய்வது எனக்கும் உதவி, பதிப்பாளருக்கும் உதவி. பிற்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கும் பயன் படும் என்று கூறிக் கொண்டு உங்கள் ஆதரவு என்றும் இருக்க வேன்டுமென்றும் வேண்டிக்கொண்டு என் முன்னுரையை முடித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழ் மக்கள்!

-சாண்டில்யன்

Sunday, May 01, 2005

Kadal Pura - an epic by Sandilyan

Vanakkam !!

this site will soon come up with Kadal Pura in electronic form. Though I see many debates on the net comparing Kadal Pura of Sandilyan Vs Ponniyin Selvan of Kalki, I like Kadal Pura, since it is the story of CHOLA kings' naval might that existed 1000 years ago. As for as historcal facts and imagination is concerned, probably writing Kadal Pura would have been tougher, hence more credits to Sandilyan.
Probably Rajendra Chola was the only king in our history to have conquered foreign lands as far as present day Andaman & Nicobar, Malaysia, Java & Sumatra to establish his might though Raja Raja Chola I had portions of ceylon and Maldives conquerred. The Kulottunga I ( Anabaya Chola) is supposed to have helped the king of Swarnadwipa (java & Sumatra) to regain his righteous kingdom and has even sent envoy to China. Though Ponniyin Selvan gives lot of details about internal status of Chola Kingdom, Kadal Pura always surprises me with the twists, author's imagination, and research about ship building technology.

I am from Trichy, and consider myself a Chola (fair enough) ;) My native place Tiruvanaikoil in Trichy has the marvelous Akilandeshwari temple, which was supposedly built by Kotchengat Chola and always thrills me with its magnificent architecture.

Since Kadal Pura increased my interest in exploring the history of Cholas and Tamilnadu, this is my book of choice. I see many sites having different electronic versions of Ponniyin Selvan, and hope to bring out the electronic version of my favorite Kadal Pura.

Vazhga Valamudan,
Sriram